திருச்சி கிழக்கில் போட்டியா? விளக்கம் கொடுத்த விசிக தலைவர் திருமாவளவன்!

திமுக கூட்டணி பிரிந்ததற்கு நான் காரணம் என்று அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெக அரசின் அமைச்சரவையில் இணைந்தது தொடர்பாக முக்கிய விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, “நான் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை தவெக தரப்பு தெரிவித்திருந்தாலும், அதற்கு நான் தொடக்கத்திலேயே சம்மதம் இல்லை என்று கூறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அமைச்சரவையில் எனக்கு இடம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை தவெக தரப்பில் வெளிப்படுத்தினார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாக தெரிவித்தேன். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்” என்று கூறினார். மேலும், “கட்சியின் பல நிர்வாகிகள் நான் அமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்தினர். இருந்தாலும், வன்னி அரசு அமைச்சராக பதவியேற்பதுதான் சரியான முடிவு என்று நான் கருதினேன்” என்றும் தெரிவித்தார்.

இந்த முடிவு சாதாரண அரசியல் முடிவு அல்ல என்றும், தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். “தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அறிவார்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட அழைத்தால் ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கும் திருமாவளவன் பதிலளித்தார். அதற்கு, “இது முழுக்க யூகமான கேள்வி. யூகமாக கேள்வி கேட்டு, அதற்கு யூகமாக பதில் சொல்ல வைத்து, பின்னர் அதை திரித்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அதுபோன்ற யூகக் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “இடதுசாரி கட்சிகள் எப்படி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறார்களோ, அதேபோல நாங்களும் ஆதரவு அளிப்பதே ஆரம்பத்தில் எடுத்த முடிவு. ஆனால் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தற்போது இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் விளக்கம் அளித்தார். விசிக சார்பில் வன்னி அரசு அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், திருமாவளவனின் இந்த பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.