இலவசம் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!

தங்கள் ஊரில் கரகாட்டத்தை பார்க்கக்கூட கூட்டம் வரும் என நாதக பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.

seeman ntk

சென்னை :திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 27, 2025) நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் தமிழக அரசியல், ஊழல், இலவசங்கள், தமிழ் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

ஊழல் மற்றும் லஞ்சத்தை விமர்சித்த சீமான், “ஊழல், லஞ்சம் ஒரு பக்கம் என்றால் உண்மை, நேர்மை ஒரு பக்கம். மக்கள் எந்த பக்கம் நிற்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இலவசங்களை “வளர்ச்சித்திட்டம் இல்லை, வீழ்ச்சித்திட்டம்” என்று கடுமையாக சாடினார். “இலவசம் தேசத்தை நாசமாக்கும் திட்டம். வளர்ச்சியை கொண்டுவந்தால் மக்கள் தங்கள் பணத்தில் அனைத்தையும் வாங்கிக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.திராவிட அரசியலை விமர்சித்த சீமான், “எல்லாமே பெரியார் என்பவர்கள் அந்தப் பக்கம் இருங்கள், ஒருவர்கூட எனக்கு ஓட்டு போட வேண்டாம்.

என் இனத்தின் முன்னோர்கள் ஒவ்வொருவரும் பெரியார் என்பவர்கள், இந்தப் பக்கம் வாருங்கள், எனக்கு ஓட்டு போடுங்கள்” என்று கூறினார். “திராவிடர்கள் நாங்கள் என்று எண்ணுபவர்கள் ஒருவர்கூட எனக்கு ஓட்டு போட வேண்டாம்; தமிழர்கள் நாங்கள் என்று எண்ணுபவர்கள் எனக்கு ஓட்டு போடுங்கள்” என்று தமிழ் அடையாளத்தை வலியுறுத்தினார்.கூட்டணி அரசியலை நிராகரித்த சீமான், “தனியாக நின்று தேர்தலில் வென்று காட்டுவதுதான் உண்மையான வெற்றி” என்று உறுதியாக தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய சீமான், “என் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவனை அடக்கம் செய்த பிறகே என் பிள்ளையை அடக்கம் செய்ய சொல்வேன்” என்று கடுமையாக தெரிவித்தார். இந்தப் பேச்சு கூட்டத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சீமானின் உணர்ச்சிபூர்வமான கருத்துகள் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.