பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க நினைத்தார் இபிஎஸ்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கு!

அமைச்சரவையில் இடம்பெற விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை அழைக்கிறோம் முதலமைச்சரின் விருப்பமும் அதுதான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி பிரச்சனை, தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அவர் பேசுகையில், “தமிழகத்தில் பெண்களும் இளைஞர்களும் இணைந்து ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் தான் 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

மேலும், “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்காக அல்ல, மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாக்கவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தன” என்றும் கூறினார்.

அதேநேரத்தில், தேர்தலுக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக இணைந்து அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட முயன்றதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். “Governor Rule மற்றும் President Rule கொண்டு வர முயற்சிகள் நடந்தன. மக்கள் கொடுத்த தீர்ப்பை மாற்ற முயற்சி செய்யப்பட்டது. திமுக மற்றும் அதிமுக இணைந்து பின்வாசல் அரசியல் செய்ய முயன்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சனைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள faction-ஐ சி.வி. சண்முகம் வழிநடத்தி வருகிறார். அவர்கள் அதிகாரத்திற்காக அல்ல, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பேசுகிறார்கள். தொடர்ந்து பல தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்கான காரணம் இ.பி.எஸ். பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடுதான் என்று அதிமுக தொண்டர்களே நினைக்க ஆரம்பித்துள்ளனர்” என்று கூறினார்.

மேலும், “பாஜகவுடன் இணைந்தது மட்டுமல்ல, பின்னர் திமுகவுடனும் இணைந்து செயல்பட முயன்றது அதிமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வரலாற்றுப் பிழை என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இறுதியாக, “அதிமுக என்பது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கி வளர்த்த கட்சி. அந்தக் கட்சியை ஒரு தோழமை உணர்வோடு தான் தமிழக வெற்றிக் கழகம் பார்க்கிறது. அதிமுக நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.