பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - த.வெ.க அரசை சாடிய இபிஎஸ்!

கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை விஜய் அரசு ஏமாற்றுவதா என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Hero Image

சென்னை : விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். “விவசாயிகளை ஏமாற்றும் அரசு நீண்ட நாள் நிலைக்காது” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய தமிழக அரசை “பொய்க்கால் குதிரை அரசு” என விமர்சித்துள்ளதுடன், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் “விஞ்ஞான ஏமாற்று வேலை” நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாகவும், மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் “குதிரை பேரம்” போன்ற கேவலமான அரசியலில் ஆட்சி கவனம் செலுத்தி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“தமிழக மக்கள் இந்த அரசின் செயல்பாடுகளை முகம் சுளித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காகத்தான் இந்த பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2021ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதுதான் உண்மையான விவசாயி நல அரசு செய்யும் செயல்” என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்” என்று கூறிய அரசு, தற்போது நில அளவை அடிப்படையாக எடுக்காமல் கடன் தொகையை அடிப்படையாக வைத்து விவசாயிகளை ஏமாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “2021ஆம் ஆண்டு அதிமுக அரசு ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்த நிலையில், தற்போதைய அரசு வெறும் ரூ.2,044 கோடி கடனை மட்டுமே தள்ளுபடி செய்கிறது. இதைப் பார்த்தாலே விவசாயிகளுக்கு உண்மை புரியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, “மண்ணில் இறங்கி உழைத்த விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். விவசாயிகளை ஏமாற்றிய எந்த அரசும் நிலைத்ததில்லை. சோறு போடும் விவசாயி கடவுளுக்கு சமம். அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.