சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் களமிறங்கியுள்ள அரசியல் கட்சிகள் இறுதி கட்டத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளன. மொத்தம் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க பல்வேறு கட்சிகள் கடுமையாக போட்டியிடும் சூழல் நிலவுகிறது.
நான்கு முனை போட்டி
இந்த முறை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் மாநில அரசியல் சூழல் மிகவும் சூடுபிடித்துள்ளது.
இதில், திமுக காங்கிரஸ், தேமுதிக, விசிக, என மொத்தம் 14 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அதிமுக பாஜக, பாமக என 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. த.வெ.க மற்றும் நாதக தனித்து போட்டியிடுகிறது. நேற்று இறுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தனர்.
மேலும், இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291. இதில்:
- 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆண்கள்
- 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பெண்கள்
- 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள்
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் 85% ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு நேரம்
நாளை காலை 7 மணிக்கு பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் முன்பாக, அதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன் வாக்குச்சாவடிகளில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்படும். இந்த சோதனை செயல்முறையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற அலுவலர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சில மாதிரி வாக்குகள் பதிவு செய்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வார்கள். இந்த சோதனை முடிவில் எந்த கோளாறும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே, காலை 7 மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்கும் நடைமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு மாலை 6 மணி வரை நடைபெறும்.
வாக்குச்சாவடி ஏற்பாடுகள்
மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் பல வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில், வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காண பல வண்ணங்களில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி எண்களும் தனித்தனி வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் குழப்பம் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், இந்த தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தீர்ப்பே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தீர்மானிக்கப் போகிறது. அனைவரின் கவனமும் இப்போது வாக்குப்பதிவின் மீது திரும்பியுள்ளது.
