அதிமுக ஆலோசனை கூட்டம்., “உங்க வாயில் நல்ல வார்த்தையே வராதா.?” திண்டுக்கல் சீனிவாசன் கலகல..,
அதிமுக மாவட்ட செயலலாளர்கள் கூட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு "உங்க வாயில் நல்ல வார்த்தையே வராதா?" என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் (2025) ஏப்ரல் மாதம் நடைபெறும். இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆளும் திமுக ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, எதிர்கட்சியான அதிமுகவிலும் தற்போது தேர்தல் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் , வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று சென்னையில் உள்ளஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக தலைமை பொறுப்பில் இருந்த போது, சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அவர் எடுப்பார். அதுபோல நவம்பர் 6ஆம் தேதி முக்கிய அதிரடி மாற்றங்கள் ஏதேனும் நிகழுமா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதில் கூறிய திண்டுக்கல் சீனிவாசன், “ஏன் , உங்கள் வாயில் நல்ல வார்த்தையையே வராதா.? மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே முறையாக அறிவிப்பார்.” என கூறிவிட்டு சென்றார்.