கல்வி நிதியை விடுவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2வது நாளாக உண்ணாவிரதம்!

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்கக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Sasikanth Senthil

திருவள்ளூர் :காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டித்து, நேற்று (ஆகஸ்ட் 29) முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சசிகாந்த் செந்தில், இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இது 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர், இது தனிப்பட்ட போராட்டம் அல்ல, மாறாக தமிழ்நாட்டு மாணவர்களின் கல Ivithu உரிமைக்கான போராட்டம் என்று வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.சி.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அரசு, புதிய தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) ஏற்காத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்த தமிழ்நாட்டை புறக்கணிப்பதாகவும் சசிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், காந்திய வழியில் அகிம்சை முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும், நிதி விடுவிக்கப்படும் வரை தொடருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.