உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி! மு. வீரபாண்டியன் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடக்கிறது என தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

Hero Image

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தமிழ்நாட்டு அரசியலில் எம்.எல்.ஏ-க்கள் விலை பேசப்படும் 'குதிரை பேர கலாசாரம்' தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தற்போதைய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரே இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மு. வீரபாண்டியன், "தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் நடப்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மோசமான அரசியல் கலாசாரம் வட மாநிலங்களில் இருந்து இங்குப் பரவியிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்துவது தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்திற்கும், மாநிலத்தின் நலனுக்கும் மிக அவசியமானது," என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் " எங்கள் கட்சியின் உண்மையான பலம் மற்றும் கள நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது," என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கூட்டணி சார்பாகவோ அல்லது தனித்தோ போட்டியிடுவது குறித்து நாங்கள் இன்னும் எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. இத்தகைய சூழலில், கூட்டணித் தலைவராக இருக்கும் மு. வீரபாண்டியன், குதிரை பேரம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.