சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'கருப்பு' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. உலக அளவில் இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா தனது அடுத்த படத்துக்கான தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், அவருடைய நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ . இந்த திரைப்படத்தை தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் 40 வயதைக் கடந்த சர்வதேச துப்பாக்கிச் சுடும் வீரரான 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், அனில் கபூர், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசா, பவானி சாரே, காளி வெங்கட், சுனில் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படத்தின் விளம்பரப் பணிகளும் (Promotions) தற்போது தீவிரமடைந்துள்ளன.
