"உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழன் இருப்பான்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஜெர்மனியில் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

CM Stalin In Europe

கொலோன் :ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று (ஆக.31) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து பேசி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர் என்ற அடையாளத்தை விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வேர்களை, தமிழை மறக்காதீர்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாற்றத்தை பாருங்கள். நமது பண்பாட்டை, எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள், கலைஞர் உலகத்திற்கு குழந்தைகளை அழைத்து வந்து சுற்றிக் காட்டி வரலாற்றை சொல்லிக் கொடுங்கள்.

உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழன் இருப்பான், தமிழ்க் குரலை கேட்கலாம் என்று சொல்கிற அளவுக்கு உலகெல்லாம் பரவி தனது அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கும் இனம்தான் நமது தமிழினம்” என்று கூறியுள்ளார். இந்தப் பயணம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.