தாயுமானவர் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி தாயுமானவர் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

CMThayumanavarScheme

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 12 இன்று) சென்னையில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஒரு மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி, திட்டத்தை முறைப்படி தொடங்கினார்.

இந்த முயற்சி, தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த திராவிட மாடல் ஆட்சியின் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், 34,809 நியாயவிலைக் கடைகள் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்கள் பயனடைவார்கள். இதில், 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 முதியோரும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மின்னணு எடைத்தராசு மற்றும் e-PoS இயந்திரங்களுடன் கூடிய மூடிய வாகனங்களில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பயனாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பார்கள். இதற்காக அரசு ஆண்டுக்கு ரூ.30.16 கோடி செலவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டம் குறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள  “திராவிட மாடல் ஆட்சியில், ஒவ்வொரு திட்டமும் மக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ‘தாயுமானவர் திட்டம்’ மக்களின் வீடு தேடி சேவைகளை வழங்கும் இந்தியாவிற்கே முன்மாதிரியான முயற்சி. இதன் பயன் கடைக்கோடி மனிதர்களையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்யும் கடமையை நாங்கள் உணர்கிறோம்,” என்று கூறினார். மேலும், கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு, இந்தத் திட்டத்தை 100% வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தத் திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் அனுபவிக்கும் சிரமங்களுக்கு தீர்வாக அமைகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட இந்த முயற்சி, தமிழ்நாடு அரசின் மக்கள் நலன்சார்ந்த பணிகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியுடன், மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள்.