சென்னை :ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்தார். தூய்மைப் பணியாளர்களுக்காக 6 புதிய திட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும், நேற்றைய தினம் பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்கு தூய்மைப் பணியாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்பொழுது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியாவும் இதில் உடனிருந்தனர். இந்த சந்திப்பில், தூய்மைப் பணியாளர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் கூடுதல் கோரிக்கைகளையும் முன்வைத்தனர், அவற்றைப் பரிசீலித்து நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
முன்னதாக, சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ல் மேயர் பிரியா தலைமையில் பேரணியும் நடைபெற்றது.
