ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த விவகாரம்...5 பேர் மீது வழக்குப்பதிவு!

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

eps

வேலூர் :மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ஆகஸ்ட் 18, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த விவகாரத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தரின் புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வேலூர் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் கூட்டத்தைக் கடந்து செல்ல முயன்றது. இதனால் ஏற்பட்ட பரபரப்பில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தரை அதிமுக தொண்டர்கள் தாக்க முயன்றதாகவும், அவரது சட்டையை இழுத்து அடையாள அட்டையை அறுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டுநர் சுரேந்தர், அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளி சந்திராவை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்றபோது, கூட்டத்தால் தடை ஏற்பட்டதாகவும், இதனால் சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று என்றும் கூறினார். இந்த சம்பவம் குறித்து, எடப்பாடி பழனிசாமி, “நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை வேண்டுமென்றே அனுப்பியதாக” குற்றம்சாட்டி, “அடுத்த முறை இதுபோல் நடந்தால், ஓட்டுநர் நோயாளியாக செல்ல வேண்டியிருக்கும்,” என எச்சரித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மீது மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.