அமைச்சரவை விரிவாக்கம்...துறை ஒதுக்கீட்டில் தொடரும் இழுபறி?

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்துவருகிறது

Hero Image

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்து நாளையுடன் ஒரு வாரம் நிறைவடையும் நிலையில், அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான இழுபறி நீடித்து வருகிறது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று ஐந்து நாட்கள் ஆகியும், அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலை இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப முதலமைச்சர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பு ஆளுநர் இருக்கும் சூழலில், அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலை முதலமைச்சர் விஜய் இன்று ஆளுநரிடம் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று அல்லது நாளை எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த இழுபறி, புதிய அரசின் செயல்பாடுகளில் சிறிது தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், முதலமைச்சர் விஜய் விரைவில் அமைச்சரவையை முழுமையாக்கி, அரசின் முழு அமைப்பையும் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.