#BREAKING: மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கிது.
சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் நுழையும் வாகனங்களின் எண், ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியுள்ளது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், இன்னும் சற்று நேரத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.