2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக மேலிடம் இன்னும் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில், நயினார் நாகேந்திரன் தானே முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாஜக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நயினார் நாகேந்திரன் தனது தொகுதியைத் தானே அறிவித்துள்ளார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக மேலிடம்தான் முடிவெடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, “இது ஒருவர் ஒவ்வொரு தொகுதியை மாற்றிப் பரிமாற்றம் செய்யும் போது வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாங்கள் கேட்டு வாங்கியது என்று இல்லை” என்று அவர் விளக்கினார்.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் ஜெயித்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தினார்.
அதே சமயம், மேலும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பப் பிரச்சனைகளை மட்டுமே கருத்தில் கொண்டதாகவும், மக்கள் பிரச்சனைகளை புறக்கணித்ததாகவும் விமர்சித்தார். கஞ்சா இல்லாத தமிழகம், பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்றார்.சாத்தூரில் போட்டியிடுகிறீர்களா அல்லது திருநெல்வேலியில் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன், “நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன்” என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார். இந்த அறிவிப்பு பாஜகவுக்குள் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
