நாகப்பட்டினம் :செப்டம்பர் 20, 2025 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மக்கள் சந்திப்பில், தலைவர் விஜய் உரையாற்றினார். “என் மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில், உங்கள் மீனவ நண்பனாக விஜய்யின் வணக்கம். நாகையில் குடிசைகள் அதிகம், ஆனால் அடுக்கு மொழிகளால் காதுகளில் ரத்தம் வந்துவிட்டது,” என்று தொடங்கிய அவர், மீனவர்களின் கஷ்டங்களுக்கு குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய விஜய் “நான் களத்துக்கு வருவது புதிதல்ல 14 ஆண்டுகளுக்கு முன்பே மீனவர்களுக்காக கண்டன கூட்டம் நடத்தினேன்,” என்று கூறி, தனது அரசியல் பயணம் புதியதல்ல என்று வலியுறுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த பிரச்சாரம் நாகையில் தவெகவின் செல்வாக்கை வலுப்படுத்தியது. விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, “வெளிநாட்டு சுற்றுலா சென்று வரும்போது முதல்வர் சிரித்துக்கொண்டே கோடி கணக்கில் முதலீடு பெற்றதாக சொல்கிறார். இது வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா? மனசு தொட்டு சொல்லுங்கள் சார்!” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அதனைத்தொடர்ந்து “நாகையில் தொழில் முன்னேற்றம் இல்லை. மீனவர்கள் படும் துன்பங்களுக்கு கடிதம் எழுதிவிட்டு அமைதியாக செல்லும் கபட நாடகம் திமுகவுக்கு இல்லை,” என்று சாடினார். “நான் பேசுவது மூன்று நிமிடங்கள் தான். இதை பேசாதே, அதை பேசாதே, கையை இவ்வளவு தான் தூக்க வேண்டும், மக்களை பார்த்து சிரிக்கக் கூடாது என்கிறார்கள்.
நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார் மிரட்டி பார்க்கிறார்களா? அதுக்கு இந்த விஜய் ஆளில்ல சார்…அதுக்கு நாம ஆளில்ல சார். மிஞ்சி போனால் என்ன செய்வீர்கள்? கொள்கையை சும்மா பெயருக்கு வைத்துவிட்டு சொந்த குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமா உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? என கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அடக்குமுறை, அராஜகம் வேணாம் சார், நான் தனி ஆள் இல்லை, மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார் எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து “மீனவர்களுக்காக குரல் கொடுப்பது என் கடமையும் உரிமையும். தமிழ்நாடு மீனவர்கள், இந்திய மீனவர்கள் என பிரித்து பார்க்க நான் பாசிச பாஜக இல்லை,” என்று விஜய் கூறினார். மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு தவறிவிட்டதாகவும், தவெக மக்களுடன் நின்று போராடும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில் ” நமது பிரச்சார பயணத்தை பார்த்து சனிக்கிழமை என விமர்சிக்கிறார்கள். வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு தான் சனிக்கிழமையில் பிரச்சார பயணத்தை முடிவு செய்தோம். மேலும் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தோம் அரசியலிலும் சிலருக்கு ஓய்வு கொடுக்கணும்ல? எனவும் பேசினார்.
