அன்றும் 2, இன்றும் 2! இதுதான் பாமக-வின் வளர்ச்சியா? கடுப்பான அன்புமணி!
சேலம் மாவட்டத்தில் தனியாக நின்று 2 தொகுதி வென்றோம். தற்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதி தான் வென்றுள்ளோம் என்றால் இது வளர்ச்சியா? என பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சேலம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை கடுமையாக கடிந்து கொண்டார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பேசினார். ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி தற்போது கூட்டணியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறதே எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், ” இதே மண்ணில் (சேலம் மாவட்டத்தில்) தனியாக நின்று 2 தொகுதிகள் வென்ற மாவட்டத்தில், இன்றைக்கு கூட்டணியில் இருந்தும் அதே 2 தொகுதிகள் தான் வென்று இருக்கிறோம். இதில் எனக்கு ஒரு சந்தேகம், இது பாமக-வின் உண்மையான வளர்ச்சியா? தனியாக நின்றாலும் 2 எம்எல்ஏ வென்று இருக்கிறோம். கூட்டணி என்றாலும் 2 தொகுதிகள் தான் வென்று இருக்கிறோம் என்றால் இது எப்படி வளர்ச்சியாகும். மற்ற கட்சிகளுக்கு இல்லாத அளவுக்கு நம்மிடம் பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட நமது ஐயா இருக்கிறார். அன்றைய காலத்தில் இருந்த உழைப்பு இன்று இல்லை. இதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
அன்றைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஐயா (டாக்டர் ராமதாஸ்) சொன்னால் செய்துவிடுவோம் என்று இருந்தார்கள். இன்று அப்படியில்லை. மக்களிடத்தில் யாரிடம் கேட்டலு சிறந்த கட்சி கொள்கை கொண்டது பாமக, தினமும் அறிக்கை வெளியிடுவது பாமக, மக்களுக்காக போராட்டங்கள் செய்வதுபாமக. ஆனால் இந்த செய்திகளை களத்தில் கொண்டு சேர்த்தால் போதும்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 6 தொகுதிகள் உள்ளது. அதில், 4 தொகுதியில் நாம் முன்னர் வெற்றி பெற்றோம். 4 எம்எல்ஏக்கள் கிடைத்தார்கள். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு சொற்ப வாக்குக்களே கிடைத்தன. கடந்த 2021 தேர்தலில் கூட 82 ஆயிரம் வாக்குகள் ஓமலூரிலும், 52 ஆயிரம் வாக்குகள் எடப்பாடியிலும் பெற்றோம். அதெல்லாம் எங்கும் போகவில்லை. அங்கு தான் இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கிறது. களத்தில் இறங்குங்கள் செயல்திட்டம் இருக்கிறது.
நமது கட்சியின் மிகப்பெரிய சொத்து, நமது தம்பி, தங்கைகள் தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்கின்றனர். சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டம். இங்கு உள்ள எல்லா தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். இன்று தனியாக நின்று வெற்றி பெற்ற தொகுதி. தற்போது 11 தொகுதியில் 8ல் வெற்றி பெற வேண்டும். பாமகவிற்கு அதிக எம்எல்ஏக்கள் கொடுத்த மாவட்டம் சேலம். “என கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஆதங்கத்துடன் தனது கருத்துக்களை முன்னிருந்து பேசினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.