எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை.!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

EPS Ambulance

சென்னை :தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அணைக்கட்டு பகுதியில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் ஒன்று தனது பரப்புரைக்கு இடையூறு செய்ததாக பழனிசாமி குற்றம்சாட்டியதாகவும், ஆனால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதனை மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு, பலரும் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கவில்லை அல்லது மன்னிப்பு கேட்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், “அவமதித்து மிரட்டுவதை ஏற்க முடியாது” என்று தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதிமுக பொதுச்செயலாளர் திரு.பழனிசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.