தஞ்சை : தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன், கட்சியில் நிலவி வரும் உள்கட்சி பிரச்சினைகளால் மனவேதனை அடைந்ததாக கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன்பு அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளியில், அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் தன்னைப் போன்ற சாதாரண தொண்டர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், "அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மீண்டும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். என் இறப்புக்குப் பிறகாவது கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
அரசியல் பயணத்தில் தன்னுடன் இருந்த தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே. பாலு, ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவையாறு தொகுதி நிர்வாகி மூர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றியையும் அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தனது இறுதிச் சடங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், அதுவே தனது ஆத்மாவுக்கு அமைதியை தரும் என்றும் அவர் கூறியிருந்தார்.இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு: தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல. மனஅழுத்தம் அல்லது துயரத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல நிபுணர்களின் உதவியை நாடுவது அவசியம்.
