சென்னை :தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்), திமுக அரசின் நலத்திட்டங்களை ‘உருட்டு கடை அல்வா’ என்று கேலிச் செய்து, தீபாவளி அறிவிப்புகளை எடுத்துக்காட்டி விமர்சித்தார். நேற்று சென்னை சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், “525 அறிவிப்புகளில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை. எல்லாவற்றுக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்று கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடங்கிய பாக்கெட்டை வழங்கினார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாகி, திமுக-அதிமுக மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து “அதிமுகவை திருட்டுக் கடையாக்கியவர் எடப்பாடி. அவர் கொடுத்த அல்வாவால்தான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து எதிர்க்க கருத்துக்கள் சொல்கின்றனர். அல்வாவும் உணவுதான், தேவைப்படும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் பரிமாறுவார்” என்று கிண்டலடித்தார்.
மேலும், சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் பிரிந்தது EPS-இன் ‘அல்வா’ காரணம் என்று சுட்டிக்காட்டினார்.திமுக அரசின் நலத்திட்டங்களை பாராட்டிய சேகர்பாபு, “மக்களிடம் சென்று கேட்டால் உண்மைத் தெரியும். விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்கள் அமல்படுத்துகின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
எத்தனை கூட்டணிகள் சேர்ந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும் என்று உறுதியளித்தார். அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களால் பின்பற்றப்படுவதை உதாரணமாகக் கூறி, அதிமுகவின் விமர்சனங்கள் வீணானவை என்று வலியுறுத்தினார். வானதி சீனிவாசனின் ஆணவக் கொலை சட்டம் குறித்த விமர்சனத்துக்கு சேகர்பாபு, “2026-ல் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறும். ‘வெ’ என்ற சொல்லால் அவர்களுக்கு அலர்ஜி. ஆணவக் கொலைகளுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும். அறிக்கையின் அடிப்படையில் சட்டம் இயற்றப்படும்” என்று பதிலளித்தார். முதல்வரின் தலைமையில் திட்டங்கள் திட்டமிட்டு நிறைவேறுவதாகவும், தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் உலகளவில் பாராட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
