அதிமுக கூட்டணியில் அமமுக... பியூஷ் கோயல் – டிடிவி தினகரன் சந்திப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.

Piyush Goyal ttv

சென்னை :தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக இணைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கூட்டணி தொடர்பான மேல்நிலை ஆலோசனைகளுக்காகவும், தேர்தல் உத்திகள் குறித்து விவாதிக்கவும் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இரு தரப்பும் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது.

சந்திப்பின்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இவர்களின் இருப்பு அமமுக – பாஜக இடையேயான ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை மேலும் தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. கூட்டணியின் தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு, பிரசார உத்திகள் உள்ளிட்டவை இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பிடத்தக்க வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை.

இது அமமுக – பாஜக இடையேயான பேச்சுவார்த்தை நேரடியாகவும், தனித்தனியாகவும் நடைபெறுவதை வெளிப்படையாகக் காட்டுகிறது. அதிமுகவுடனான உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.சந்திப்புக்குப் பிறகு டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்குவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

இதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ளவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது” என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பான மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். “விட்டுக்கொடுத்தவர்கள் கேட்டுப் போவதில்லை. ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.

அமமுக – பாஜக இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், திமுக அரசுக்கு இது பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்தக் கூட்டணி முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.