வாய்க்கு வந்ததை பேசும் ஆதவ் அர்ஜுனா....திமுக வழக்கறிஞர் வில்சன் பேச்சு!

சிபிஐ விசாரணை கோராத தவெக எதற்காக சிபிஐ விசாரணை உத்தரவை வரவேற்கிறது? என திமுக வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

nelson Aadhav Arjuna

சென்னை :தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 பேரின் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்தச் சோக சம்பவத்தின் விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, பல்வேறு சர்ச்சைகளைத் தூண்டியுள்ளது.

டெல்லியில் மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான பி. வில்சன், இந்தத் தீர்ப்பு இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளார். “கரூர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 13, 2025) வழங்கியது இடைக்கால தீர்ப்புதான். மோசடியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், இந்த இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது” என்று அவர் பேட்டியில் கூறினார். இது, தவெக அமைப்பின் முறையீட்டில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவு, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) கையேற்க உத்தரவிட்டது. மேலும், உயர்நீதிமன்ற SIT இதுவரை நடத்திய விசாரணை விவரங்களை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. வில்சன் இதைப் பற்றி கூறுகையில், “அப்படி என்றால் இன்றுவரை அவர்கள் நடத்திய விசாரணை சரியானது என்றுதான் அர்த்தம்” என்று விளக்கினார்.

அதனைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து SIT அமைக்க உத்தரவு பெற்றதாகக் கூறியது, நீதிமன்ற அவமதிப்பு என்று வில்சன் கடுமையாக விமர்சித்தார். “கரூர் நெரிசல் வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவைப் பெற்றது என ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தை இவ்வாறு குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம், “நீதிமன்ற தீர்ப்பு குறித்து தவெகவின் ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்” என்று அவர் சாடினார். இது, தவெக அமைப்பின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குரியதாக்கியுள்ளது.இருப்பினும், உச்சநீதிமன்ற உத்தரவு அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணைய விசாரணையை எதிர்கொள்ளவில்லை. வில்சன் இதை முக்கியமானதாக வலியுறுத்தினார். மேலும், அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். அந்த ஆணைய விசாரணையை உச்சநீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. இந்த ஆணையம், சம்பவத்தின் மூல காரணங்களை யார் மீது தவறு உள்ளது, யாரிடம் கவனக்குறைவு இருந்தது ஆழமாக விசாரிக்கும் என்று அவர் கூறினார்.