போர் பதற்றம்! இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு... மத்திய அரசு அலர்ட்!

ஈரான் போர் - இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு, ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

Iran WAR

டெல்லி :ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு (DGP) உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள், ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களை கண்காணிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அணிவகுப்புகள் ஏற்பாடு செய்ய முயல்வதாக அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள ஷியா சமூக அமைப்புகள், ஈரான் ஆதரவு குழுக்கள், மதத் தலைவர்கள் மூலம் அமைதியின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால், மாநில அரசுகள் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெருநகரங்கள், மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஷியா-சன்னி கலந்து வாழும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்று கூறப்பட்டுள்ளது.மாநில காவல்துறை, உளவுத்துறை அமைப்புகள் ஈரான் ஆதரவு போராட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறை தூண்டுதல் போன்றவற்றை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் பிரிவு 144 உள்ளிட்ட தடை உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் மத ரீதியிலான பதற்றம், வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. இது தற்போதைய சர்வதேச நெருக்கடியால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.