டெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, செப்டம்பர் 17, 2025 அன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, வாக்குத்திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கர்நாடகாவின் ஆலண்ட் தொகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டன. இது தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவுறுத்தலுடன் நடந்தது. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்,” என்று அவர் கூறினார். மேலும், “எனது குற்றச்சாட்டுகளுக்கு முழு ஆதாரம் உள்ளது. இது இளைஞர்களுக்கு தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் முதல் படியாகும். இனி வரவிருக்கும் ஆதாரங்கள் இன்னும் பெரிய வெளிப்பாடாக இருக்கும்,” என்று தெரிவித்து,ECI-யின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தினார்.
ராகுல் தொடர்ந்து, “கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டன. ஆலண்டில் ஒரு வாக்காளர் பட்டியல் அதிகாரி (BLO) தனது உறவினரின் வாக்கு நீக்கப்பட்டதைக் கண்டறிந்தார். ஆனால், அதை செய்தவர் தனக்கு தெரியாது என்று மறுத்தார். இதற்கு பின்னால் ஒரு மறைமுக சக்தி உள்ளது,” என்று குற்றம்சாட்டினார். மேலும், “மகாதேவபுராவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்குகள் உள்ளன. இவை CCTV இல்லாத இடங்களில் நடந்தவை,” என்று கூறி, ECI-யை பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக விமர்சித்தார்.
இந்தப் பேச்சு, 2025 பிஹார் தேர்தலுக்கு முன் தேர்தல் செயல்முறைகள் குறித்து கடும் விவாதத்தை தூண்டியது.தேர்தல் ஆணையம் (ECI), ராகுலின் குற்றச்சாட்டுகளை “தவறானவை மற்றும் ஆதாரமற்றவை” என்று மறுத்தது. “வாக்காளர் பட்டியலில் எந்த வாக்கையும் ஆன்லைனில் பொதுமக்கள் நீக்க முடியாது, இது கடுமையான மேற்பார்வையில் நடக்கும் செயல்முறை. 2023-ல் ஆலண்ட் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சிகள் தோல்வியடைந்தன, இதற்காக ECI ஒரு FIR பதிவு செய்து விசாரித்தது,” என்று ECI தெளிவுபடுத்தியது.
மேலும், “ஆலண்ட் தொகுதியில் 2018-ல் பாஜகவின் சுபாத் குட்டேதர், 2023-ல் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீல் வெற்றி பெற்றனர். வாக்கு நீக்கம் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை,” என்று ECI கூறியது. இந்த விளக்கம், ECI-யின் செயல்முறைகள் வெளிப்படையாக நடப்பதாக வலியுறுத்தியது.ராகுல் காந்தி, ECI-யின் மறுப்புக்கு பதிலாக செப்டம்பர் 19, 2025 அன்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் அடுக்கடுக்கான ட்வீட்களைப் பதிவு செய்தார்.
“நாடு முழுவதும் காங்கிரஸ் செல்வாக்கு பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. ECI வாக்குத்திருட்டுக்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருக்கிறது,” என்று அவர் கடும் கருத்து பதிவிட்டார். “வாக்குத்திருட்டு 2.0 இது, இளைஞர்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும்,” என்று மேலும் ட்வீட் செய்து, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான இயக்கத்தை தொடங்கினார்.
