தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை...முதல்வர் விஜய் இங்க வரவேண்டாம் - டி.கே.சிவக்குமார்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Hero Image

பெங்களூர் : தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கத் தயாராக இல்லை என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம் என்றும், போதிய நீர் இருப்பு இல்லாத சூழ்நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி காவிரி ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், காவிரி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் அவர், தற்போதைய சூழலில் மேகதாது மற்றும் பிற நீர்ப்பாசனப் பகுதிகளில் உள்ள நீர்வரத்து மற்றும் மாநிலத்தின் குடிநீர் தேவைகளைக் கணக்கில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முந்தைய மூன்று ஆண்டுகால வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும், மாநிலத்தில் உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் கர்நாடக அரசால் உடனடியாகத் தண்ணீரைத் திறக்க இயலாது என்றார்.

தமிழகம் தரப்பில் கூடுதல் நீர் கோரப்பட்டிருந்தாலும், கர்நாடக விவசாயிகளின் நலன் மற்றும் குடிநீர் தேவைகளுக்கே தமது அரசு எப்போதுமே முதல் முன்னுரிமை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, டெல்லியில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்குத் தாம் ஏற்பாடு செய்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோதி, சோமண்ணா, ஷோபா கரந்தலாஜே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து கலந்துகொண்டு மாநிலத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட உள்ள மேல்முறையீட்டு மனுவின் நகல் மத்திய அமைச்சர்களுக்கும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குத் தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிர்ப் பிரச்சினை காரணமாகக் கர்நாடகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் விஜய் இப்போதைக்குக் கர்நாடகா வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இருதரப்பு உணர்வுகளையும் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் வகையிலும் இந்தத் தற்காலிகத் தவிர்ப்பு அவசியமானது என்று அவர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.