ஆசிரியை அடித்ததால் வகுப்பறையிலேயே மாரடைப்பு ? எல்.கே.ஜி மாணவர் பரிதாப பலி !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை தாக்கியதால் 6 வயது எல்.கே.ஜி மாணவர் வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monster' Teacher

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கொத்த ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வகுப்பறையிலேயே 6 வயது எல்கேஜி (LKG) மாணவர் பிரணய் தேஜா சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப் பாடங்களைச் சரிபார்க்கும் போது ஆசிரியை நடத்திய கொடூரத் தாக்குதலே சிறுவனின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

வகுப்பறை சித்திரவதை

விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன்ஸ் பள்ளியில் வியாழக்கிழமை வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன. அப்போது வீட்டுப் பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜாவை மற்ற மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தும் நோக்கில், ஆசிரியை அவனது சட்டைப் பொத்தான்களைக் கழற்றி ஆடையை உருவ முயன்றுள்ளார். இதனால் கடும் பயமடைந்த அச்சிறுவன் "வேண்டாம் மேம்... வேண்டாம் மேம்..." என்று கதறி அழுது கைகளைக் கூப்பித் தடுத்துள்ளான்.

ஆனாலும் ஆசிரியை ஆத்திரத்தில் சிறுவனின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இதில் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த சிறுவன் கண நேரத்தில் நிலைதடுமாறி ஆசிரியை முன்னிலையிலேயே சுருண்டு விழுந்து மயக்கமடைந்தான். ஆசிரியை ஒரு சிறிய குழந்தையிடம் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டதையும், சிறுவன் சுருண்டு விழுந்ததையும் நேரில் கண்ட வகுப்பறையில் இருந்த மற்ற பிஞ்சுக் குழந்தைகள் அனைவரும் கடும் பீதியடைந்து உறைந்து போயினர்.

சிசிடிவி ஆதாரம்

மயக்கமடைந்த சிறுவனை உடனடியாக அருகில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனிடையே வகுப்பறையில் ஆசிரியை சிறுவனின் சட்டையைக் கழற்ற முயல்வதும், கன்னத்தில் அறைந்ததும், சிறுவன் "வேண்டாம் மேம்" எனக் கதறுவதும் சிசிடிவி (CCTV) காட்சியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் போராட்டம்

சிறுவனின் உயிரிழப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிங் ஜார்ஜ் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறு செய்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாகக் கடுமையான கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

காவல்துறை விசாரணை

இச்சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வரும் காவல் துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுவனின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ளனர். பள்ளி நிர்வாகத்திடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை அடித்ததால் வகுப்பறையிலேயே மாரடைப்பு ? எல்.கே.ஜி மாணவர் பரிதாப பலி !