ஹரியானா கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக பங்கேற்கும் அமைச்சர்.!
ஹரியானாவில் தொடங்கும் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக அமைச்சர் அனில் விஜ் பங்கேற்கிறார்.
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி தயாரித்து வரும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை ஹரியானாவில் நாளை தொடங்குகிறது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக அனில் விஜ் பங்கேற்க முன்வந்துள்ளார்.
நாட்டின் 22 தளங்களில் 26,000 தன்னார்வலர்களுடன் கோவாக்சின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை பாரத் பயோடெக் தொடங்கியுள்ளது என்று மருந்து நிறுவனம் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து இந்த சோதனை நடத்தபட்டு வருகிறது.
மூன்றாம் கட்ட சோதனைகள் இந்தியா முழுவதும் 26,000 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர். இது, ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து நடத்தப்படும். இது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய மருத்துவ பரிசோதனையாகும். இந்த சோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.