டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வு (NEET UG 2026) மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முழு தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் நாடு முழுவதும் இருந்து சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசின் ஒப்புதலுடன் NEET UG 2026 மறுதேர்வு ஜூன் 21, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும், முன்பு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தானாகவே மறுதேர்வுக்கு தகுதியுடையவர்கள் எனவும் NTA தெளிவுபடுத்தியுள்ளது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டும் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை நம்ப வேண்டும் எனவும், வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனவும் NTA அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு மருத்துவக் கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
