கம் பேக் கொடுப்பதில் திமுக தான் Specialist...மு.க.ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!

திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Hero Image

சென்னை : திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு மாற்றங்கள் குறித்து முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார்.

கட்சியை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் முழுமையான நம்பிக்கையைப் பெறவும் நமது நடவடிக்கைகள் முழுமையாக அமைய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், அமைப்பு ரீதியாகப் பல அதிரடி மாற்றங்களைச் செய்தாக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு ஏராளமான புதுமுகங்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாகச் செயல்படும்போதுதான் இயக்கம் மேலும் பலம் பெற்று நிலைத்திருக்கும் என்றும், மாறாக ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் நம்பி அந்தந்த மாவட்டங்களில் கட்சியை வளர்த்துவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கழக வரலாற்றில் இந்தச் செயற்குழு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் எனவும், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் உங்களின் ஒப்புதலுடன் செய்யப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்கட்சிகளின் போக்கை விமர்சித்துப் பேசிய அவர், தங்களை விமர்சிப்பவர்கள் எத்தகைய பின்னணியில் இருக்கிறார்கள் என்பதைக் சுட்டிக்காட்டி, "நாம் எதற்கெடுத்தாலும் சுணங்கிப் போய்விடுபவர்கள் அல்ல; அரசியலில் 'போர் அடிக்குது' என்று வந்தவர்கள் அல்ல, மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராட வந்தவர்கள்" என்று குறிப்பிட்டார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தால் அடுத்த தேர்தல் வரை ஒதுங்கி இருப்பதும் தூங்குவதும் மற்ற கட்சிகளின் வழக்கம் என்றும், ஆனால் எத்தகைய சூழலிலும் மக்கள் நலனுக்காகச் சுறுசுறுப்பாகச் செயல்படும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை எதிரிகளுமே ஒப்புக்கொள்வார்கள் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அரசியலில் மீண்டும் 'கம் பேக்' கொடுத்து வெற்றியைத் தக்கவைப்பதில் தி.மு.க-வே எப்போதுமே முன்னோடியாகத் திகழும் என்று அவர் கழகத் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

கம் பேக் கொடுப்பதில் திமுக தான் Specialist...மு.க.ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!