ஜனவரி 1 முதல் FASTag கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

Union Minister Nitin Gadkari has said that the FASTag will be mandatory for all vehicles from January 1, 2021.

அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், இன்று காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவுவதன் மூலமும் சாலைப் பணியாளர்களுக்கு ஃபாஸ்டேக் பலனளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மத்திய மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-இன் படி 2017, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன உற்பத்தியாளர்கள் அல்லது முகவர்களால் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே பிட்னஸ் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் தேசிய அனுமதி வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்துவது 2019, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.