தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பணம் பெற்றதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் FIR பதிவாகியுள்ளது.
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தடை செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கட்சி தான் அதிகளவில் தேர்தல் நிதி பெற்றுள்ளது என்பது அதன் பிறகான தகவலில் தெரியவந்தது.
பெரு நிறுவனங்களை வற்புறுத்தி, மத்திய அரசு அமைப்பான அமலாக்கத்துறை மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது கர்நாடகா மாநிலம் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜே.எஸ்.பி துணை தலைவர் ஆதர்ஷ் ஆர்.ஐயர் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த புகாரின் கீழ் சட்டப்பிரிவு 384 மற்றும் 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.