கூலி படத்தில் ராஜசேகராக சத்யராஜ்.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?

கூலி படத்தில், 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ். அவரது புதிய தோற்றம் கவனம் ஈர்த்துள்ளது.

Sathyaraj joining the cast of Coolie as Rajasekar

சென்னை:கூலி படத்திலிருந்து இதுவரை நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின.  தற்பொழுது, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் அவரது போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் அவர் கையில் மின்சார வயர் உடன் நிற்கிறார். படத்தில் இவருக்கு நெகடிவ் ரோலா? அல்லது ரஜினிக்கு நண்பராக வருவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. படத்தில் அவரது கேரக்டர் பெயர் பிரீத்தி என வைக்கப்பட்டுள்ளது. அவரது லுக்குடன் கூடிய போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தோற்றம் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங் காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் மகேந்திரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்துள்ளனர். அதே போல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் முதல் முறையாக லோகேஷ் படம் இயக்குகிறார். இந்த புதிய கூட்டணி காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.