தமிழகத்தில் டிசம்பர் 31 வரை மிதமான மழைக்கே வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் டிச.31ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Featured image

சென்னை:தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று  மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

இதன் காரணாமாக, இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.