பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை! புதிய டிஜிபி மகேஷ்குமார் உறுதி!

போதைப்பொருட்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாட்டின் டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் பேட்டி அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழகத்தின் 34-வது சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கிய அவர், தமிழக மக்களுக்கு சிறப்பான காவல் சேவையை வழங்க உறுதியளித்தார்.

பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் குமார் அகர்வால், இந்த பொறுப்பை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவோம்" என்றார்.

மேலும், போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இணையவழி மோசடிகள் மற்றும் இணைய குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என கூறினார்.

"போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, இணைய குற்றங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காவல்துறை முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். இந்த முயற்சிகளில் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். அனைவரின் ஆதரவுடனும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படும்" என்று மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வாலின் தலைமையில், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் காவல்துறையின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.