வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் சதி.? விஜேந்தர் சிங் பரபரப்பு குற்றசாட்டு.!
டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெறும் இறுதி போட்டியில் தனது எடையை குறைப்பதற்காக நேற்றைய நாள் இரவு முழுவதும் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், வெறும் 100 கிராம் எடை கூடியதன் காரணமாக சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது.
இந்நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்தது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனால் பல அரசியல் கட்சி தலைவர்கள், பல முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர்கள் அவர்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் குத்து சண்டை வீரரான விஜயேந்தர் கூறியதாவது, “மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு பின்னால் சதி இருக்கிறது. எங்களை போன்ற குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ வரை எடையை குறைக்க முடியும், 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
பசி, தூக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கு தெரியும். இந்தியா விளையாட்டில் சாதிப்பதை பிடிக்காதவர்கள் செய்த சதியாக பார்க்கிறேன்”, என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.