2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? CSK CEO காசி விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

2026 ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்றும், அவர் ஓய்வுபெறப் போவதில்லை என காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

kasi viswanathan csk dhoni

சென்னை :சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) காசி விஸ்வநாதன், அடுத்த ஆண்டு ஐபிஎல் 2026 தொடரில் ‘தல’ எம்.எஸ். தோனி விளையாடுவார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைக்கு தோனி ஓய்வு பெறும் எந்தத் திட்டமும் இல்லை என அவர் தெரிவித்தார். சமீபத்தில் குழந்தைகளுடனான ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஸ்வநாதன், தோனியின் ஓய்வு குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடையே, குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Provoke Lifestyle இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில், குழந்தைகள் விஸ்வநாதனிடம் கேட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வெளியாகியுள்ளன. ஒரு குழந்தை, “தோனி ஓய்வு பெறப் போகிறாரா?” என்று கேட்டதற்கு, “இல்லை, அவர் ஓய்வு பெறப் போவதில்லை!” என்று திட்டவட்டமாக பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு, “தோனி எப்போது ஓய்வு பெறுவார்?” என்று கேட்கப்பட்டபோது, “நான் அவரிடம் கேட்டுவிட்டு வந்து உங்களுக்குச் சொல்கிறேன்” என்று நகைச்சுவையாகவும் தெரிவித்தார்.

இந்த உரையாடல் தோனியின் ஐபிஎல் பயணம் தொடரும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. கடந்த ஐபிஎல் சீசன் முடிவில் தோனி ஓய்வு குறித்து சஸ்பென்ஸ் வைத்திருந்தார். “ஓய்வு குறித்து யோசிக்க எனக்கு 4-5 மாதங்கள் உள்ளன” என்று அவர் கூறியிருந்தார். அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தாலும், தோனியின் ஆட்டத்திறன், ஃபினிஷிங் திறமை மற்றும் அனுபவம் சிஎஸ்கே அணிக்கு இன்னும் இன்றியமையாதவை. 44 வயதான தோனி, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாகக் கருதப்படுகிறார்.

அவர் ஐந்து முறை சிஎஸ்கே அணியை ஐபிஎல் சாம்பியனாக்கிய தலைவராவார்.சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் ஓய்வு அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், விஸ்வநாதனின் இந்த அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளது.  அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் திட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, “நாங்கள் தயாராக இருக்கிறோம். வெல்ல முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று விஸ்வநாதன் பதிலளித்தார். இது அணியின் உற்சாகத்தையும், தோனியின் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்துகிறது.

தோனியின் பங்களிப்பு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமானது என்பதை விஸ்வநாதன் வலியுறுத்தினார். இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும், களத்தில் ஃபினிஷராகவும் தோனி தொடர்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த அறிவிப்பு ஐபிஎல் ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.