டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இருவரின் உடல்தகுதி நிலை குறித்த கவலை காரணமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன் நடைபெறவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்த தொடர் நடைபெறுகிறது.
காயத்தால் விராட் கோலிக்கு ஓய்வு?
ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலி, போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஓடும்போது தொடை தசைப்பிடிப்பால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால், ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஐபிஎல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 675 ரன்கள் குவித்த கோலி, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களும் அவரது கணக்கில் இடம்பெற்றுள்ளன.
ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம்
இந்திய அணியின் முன்னாள் ஒருநாள் கேப்டனான ரோகித் சர்மாவும் முழு உடல்தகுதியை எட்டாததால், தொடரில் விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின்போது தொடை நரம்பு காயம் காரணமாக சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய ரோகித், 283 ரன்கள் எடுத்திருந்தார்.
39 வயதான ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டிலிருந்தும், 2025ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ரோகித் 650 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல் விராட் கோலி கடந்த ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் 891 ரன்கள் எடுத்துள்ளார். 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் வெற்றிக்கும் இருவரும் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனினும், இருவரும் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மருத்துவ குழுவின் இறுதி அறிக்கை மற்றும் உடல்தகுதி மதிப்பீட்டுக்குப் பிறகே அவர்கள் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடுவார்களா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
