டெல்லி : 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், மூத்த வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் இடம் பெறுவார்களா என்பது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா விரிவாகப் பேசியுள்ளார்.
நிலவும் குழப்பம்
இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், பந்துவீச்சுத் துறையில் மட்டும் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன. அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தாலும், மறுபுறம் முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்களின் பெயர்களும் பேசப்பட்டு வருகின்றன. புவனேஷ்வர் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள நிலையில், ஷமி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதுடன் வரவிருக்கும் துலீப் டிராபி தொடரிலும் பங்கேற்க உள்ளார்.
ஆகாஷ் சோப்ரா சொல்வதென்ன
தமது 'ஆகாஷ்வாணி' (Aakashvani) சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆகாஷ் சோப்ரா, இந்த இரு பந்துவீச்சாளர்களின் தேர்வு குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
புவனேஷ்வருக்கு எதிராக உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் போன்ற தொடர்களை மட்டும் வைத்து அவரது உடல் தகுதியை (Fitness) மதிப்பிட முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் வீச அவரால் முடியுமா என்பது பெரிய கேள்விகுறியாகும். ஐபிஎல்லில் வீசும் 4 ஓவர்கள் மற்றும் சையது முஷ்டாக் அலி தொடரை மட்டும் வைத்து உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுப்பது கடினம். அவரைத் தேர்வு செய்ய விரும்பினால், உலகக் கோப்பைக்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அனைத்து உள்நாட்டு ஒருநாள் தொடர்களிலும் அவரை ஆட வைக்க வேண்டும் என்றார்.
ஷமி ரஞ்சி டிராபியில் விளையாடியுள்ளதோடு, துலீப் டிராபியிலும் ஆட உள்ளார். எனவே உடல் தகுதியின் அடிப்படையில் புவனேஷ்வரை விட ஷமி சிறந்த நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஷமி மற்றும் புவனேஷ்வர் இருவரும் ஒரே நேரத்தில் உலகக் கோப்பை அணிக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று தெளிவாகக் கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, இவர்களில் எவரேனும் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது என்றார்.
இந்த விவகாரத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தெளிவு கிடைத்துவிடும் என்று குறிப்பிட்ட ஆகாஷ் சோப்ரா, "இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணம் (அங்கு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன) யார் 2027 உலகக் கோட்ப்பை அணியில் இருப்பார்கள், யார் இருக்க மாட்டார்கள் என்பதைத் தீர்மானிக்கும்" என்றார்.
