டெல்லி :ரோஹித் ஷர்மா, அக்டோபர் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று இன்னிங்ஸ்களில் 202 ரன்கள் குவித்த அவர், சராசரி 101 உடன் தொடரின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா 1-2 என்று தொடரை இழந்தாலும், ரோஹித் பேட்டிங்கில் தனித்து நின்றார். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 29 அன்று அவர் ஷுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி, ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உயர்ந்தார். 38 வயது 183 நாட்களில் இந்த சாதனையைப் படைத்த ரோஹித், இதைச் செய்த மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னாள் இந்திய கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த், ரோஹித் ஷர்மாவைப் பாராட்டி, அவரது தேர்வு வயது அல்ல, உடற்தகுதியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். 44 வயதிலும் ஐபிஎல்-இல் விளையாடும் எம்.எஸ். தோனியின் உதாரணத்தை அவர் எடுத்துக்காட்டினார். “தோனி இன்னும் விக்கெட் கீப்பிங் செய்து, ரன் எடுத்து ஓடுகிறார். அவரைப் போல் யாராலும் இந்த வயதில் செய்ய முடியாது. அவரது ஸ்டம்பிங் இன்னும் வேகமாக உள்ளது. எனவே, வயது அல்ல, உடற்தகுதி மட்டுமே முக்கியம்” என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
மேலும் ,ரோஹித் ஷர்மாவின் தரவரிசை உயர்வு, 2027 உலகக் கோப்பையில் அவரும் விராட் கோலியும் விளையாடுவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக ஸ்ரீகாந்த் கூறினார். “தரவரிசையில் முதல் ஆறில் ரோஹித், விராட், சுப்மன் கில் உள்ளனர். எனவே, டாப் 3 இவர்களாகவே இருக்கும்” என்றார். 2023 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சிறப்பாக விளையாடியதை அவர் நினைவுகூர்ந்தார்.
உடற்தகுதி ஒரு பக்கம் என்றால், மனத்தகுதி மற்றொரு முக்கிய அம்சம் என்று ஸ்ரீகாந்த் வலியுறுத்தினார். “ரோஹித், விராட், தோனி ஆகியோர் மனரீதியாக இன்னும் வலுவாக உள்ளனர். அவர்கள் அணிக்காக வெற்றி பெற விரும்புகின்றனர். உலகிற்கு அதை நிரூபிக்க விரும்புகின்றனர். அதனால்தான் அவர்கள் மகத்தான வீரர்கள்” என்று பாராட்டினார். முடிவாக, ரோஹித் ஷர்மாவின் புதிய சாதனை, அவரது உடற்தகுதி மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளது. 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் முக்கிய இடம் பிடிப்பார் என்று ஸ்ரீகாந்த் உறுதியாக நம்புகிறார்.
