டெல்லி :ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் தனது திறமைக்கு தானே குறைவாக மதிப்பிட்டு (selling himself short) ஆடுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். ப்ரூக்கை நீண்டகாலமாக ரசித்து வரும் பாண்டிங், ஆஸ்திரேலிய மண்ணில் அவர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தின் ஆஷஸ் தொடர் ஆட்டம் போலவே ப்ரூக்கின் தொடக்கமும் இருந்ததாக பாண்டிங் குறிப்பிட்டார்.
சில தருணங்களில் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விரக்தியான தருணங்கள் மற்றும் தேவையற்ற ஷாட்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக அமைந்து 3-0 என்ற முன்னிலையைப் பெற வைத்துள்ளன.
ஜோ ரூட் தவிர மற்ற இங்கிலாந்து வீரர்களைவிட அதிக ரன்கள் (173) எடுத்துள்ள ப்ரூக், ஆறு இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பல விக்கெட்டுகள் அணிக்கு முக்கியமான தருணங்களில் விழுந்துள்ளன.ICC Review நிகழ்ச்சியில் பேசிய பாண்டிங், “ஹாரி ப்ரூக்கை பார்ப்பது மிகவும் சிறப்பான அனுபவம். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் சில விக்கெட்டுகளில் அவர் தனது திறமைக்கு தானே குறைவாக மதிப்பிட்டு ஆடுகிறார். அவர் செய்யும் சில ஷாட்கள் தேவையில்லாதவை” என்று கூறினார்.
ஸ்காட் போலண்ட் வீசிய யார்க்கருக்கு லேப் ஷாட் ஆட முயல்வது போன்ற தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.ப்ரூக் ஜோ ரூட்டை போல ஆட வேண்டும் என்று கூறிய பாண்டிங், “ப்ரூக்குக்கு ரூட்டை விட குறைவான திறமை இல்லை. அணி 435 ரன்களை துரத்தும்போது அவர் நூறு ரன்கள் எடுக்க வேண்டிய தருணத்தில் அப்படி ஆடுவது ஏமாற்றம் அளிக்கிறது.
அவரது அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் இதே விமர்சனத்தை வைப்பார்கள்” என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவில் இப்படி ஆட முடியாது என்று எச்சரித்த பாண்டிங், “ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்தாலும் ஆஸ்திரேலியா அதை பயன்படுத்திக்கொள்ளும். இந்தத் தொடர் முழுவதும் அதையே பார்த்தோம். இங்கிலாந்து ‘அதுதான் எங்கள் ஆட்ட முறை’ என்று சொல்லலாம், ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அது வேலை செய்யாது” என்று முடித்தார். பாண்டிங்கின் இந்த விமர்சனம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் தோல்விக்கு ப்ரூக்கின் ஆட்ட முறை ஒரு காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியுள்ளது.
