மொஹ்சின் நக்வி கோப்பையுடன் ஓடிவிட்டார்...பிசிசிஐ கடும் குற்றச்சாட்டு!

ஆசிய கோப்பையை பாக். அமைச்சர் கையில் வாங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

Featured image

துபாயில் நடந்த ஆசியா கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 5 விக்கெட்டில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி, வெற்றிக் கோப்பையை தனது ஹோட்டல் அறைக்கு எடுத்துச் சென்றதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா குற்றம்சாட்டினார்.

இந்த செயல் விளையாட்டு தன்மைக்கு எதிரானது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் வெற்றி கொண்டாட்டத்தை முடக்கிய இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை கிளப்பியது. விருது வழங்கும் விழாவில் இந்திய அணிக்கு கோப்பையோ, மெடல்களோ வழங்கப்படவில்லை.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவம் முதன்முறை என்று வேதனையுடன் தெரிவித்தார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றும் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க மறுத்த பிசிசிஐ, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடமிருந்து கோப்பையைப் பெற விரும்பியது. ஆனால், நக்வி இந்த கோரிக்கையை நிராகரித்தார்.

நக்வி, இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்காமல், மெடல்களையும் கோப்பையும் எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். இதை “முற்றிலும் ஏற்க முடியாத செயல்” என்று சைக்கியா கண்டித்தார். இந்திய அணிக்கு உரிய மரியாதை மறுக்கப்பட்டது குறித்து இந்தியா ஐசிசியில் கடுமையான புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

நவம்பரில் துபாயில் நடக்கவுள்ள ஐசிசி மாநாட்டில் இந்தியா இந்த சம்பவத்துக்கு எதிராக கடுமையாகப் போராடும். நக்வியின் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று சைக்கியா வலியுறுத்தினார். ஒரு பக்கம் இந்த சர்ச்சைகள் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்திய அணி கோப்பை இல்லை என்றாலும் கூட கோப்பை இருப்பது போல கொண்டாடினார்கள். அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.