முதல் வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான்! குஷியில் ரஷீத் கான் பேசியது என்ன தெரியுமா?

இது நல்ல தொடக்கம். ஆனால், ஃபீல்டிங் மேம்பட வேண்டும் என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

afghanistan vs hong kong

அபுதாபி: இந்த ஆண்டுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், நேற்று நடந்த முதல் போட்டியில், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் ஹாங்காங் அணியும் மோதியது. இப்போட்டியில், ராஷித் கான் தலைமையிலான அஃப்கானிஸ்தான் அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 94 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.

இது டி20 ஆசியக் கோப்பையில் ரன்கள் அடிப்படையில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது.அஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் (8 ரன்கள்) மற்றும் இப்ராஹிம் ஸாத்ரான் (1 ரன்) ஆரம்பத்தில் விரைவில் வெளியேறினர். அந்த சமயத்தில், அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது. ஆனால், தொடக்க வீரர் செடிகுல்லா அடால் (73* ரன்கள், 52 பந்துகள்) மற்றும் அனுபவ வீரர் முகமது நபி (33 ரன்கள், 26 பந்துகள்) ஆகியோரின் 51 ரன்கள் ஜோடி துவண்டு கிடைத்த அணியை கட்டியெழுப்பியது.

பின்னர், அஸ்மதுல்லா ஒமர்ஸை (53 ரன்கள்) எடுத்து அடால் உடன் 82 ரன்கள் ஜோடி சேர்த்து, அணியை 188/6 ஸ்கோருக்கு கொண்டு சென்றார். இவர்களுடைய இந்த அதிரடி ஆட்டம் காரணமாக தான் இந்த அளவுக்கு ரன்களும் அணிக்கு கிடைத்தது. அதே சமயம், ஹாங்காங்கின் பந்துவீச்சாளர்கள் கிஞ்சித் ஷா (2 விக்கெட்டுகள்) மற்றும் ஆயுஷ் ஷுக்லா (2 விக்கெட்டுகள்) ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். அப்படி இருந்தும்  ஆப்கானிஸ்தான் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை.

அடுத்ததாக ஹாங்காங் அணி 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், தொடக்கத்திலே விக்கெட் இழந்து தடுமாறியது என்று சொல்லலாம். தொடக்க வீரர் அன்ஷுமான் ராத் (0 ரன்கள்) இழந்து தொடங்கியது. பின்னர் ஜீஷான் அலி (5 ரன்கள்) மற்றும் நிஸாகத் கான் (0 ரன்கள்) ஆகியோர் விரைவில் வெளியேறினர், அணி 23/4 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பாபர் ஹயத் (39 ரன்கள், 43 பந்துகள் – 3 சிக்ஸர்கள்) தனிமையாக போராடினாலும், அஃப்கானிஸ்தானின் பந்துவீச்சாளர்கள் ஃபஸல்ஹக் ஃபாரூகி (2/16), குல்பதீன் நைப் (2/8) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஹாங்காங் 94/9 ஸ்கோருக்கு சுருண்டது.

இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், “இது நல்லதொடக்கம். ஆனால், ஃபீல்டிங் மேம்பட வேண்டும். ஹாங்காங் அணி நல்ல சாத்தியத்தை காட்டியது, ஆனால் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி,” என்று கூறினார். ஹாங்காங் கேப்டன் யாசிம் முர்தாஸா, “அஃப்கானிஸ்தானின் ஸ்கோர் 150 என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இது நமக்கு அனுபவம் அளிக்கும்,” என்று தெரிவித்தார்.