#Breaking:திமுக வட்ட செயலாளர் கொலை – இருவர் கைது!

Two were arrested in Samayapuram in connection with the murder of DMK secretary Selvam in Madipakkam,Chennai.

திருச்சி:சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சமயபுரத்தில் இருவர் கைது.

சென்னை மடிப்பாக்கம் 188 வது வட்ட திமுக செயலாளரான செல்வம் கடந்த பிப்.1 ஆம் தேதி இரவு 8 மணியளவில் மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது,இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென செல்வத்தை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

மேலும்,இதனை தடுக்க முயன்ற செல்வத்தின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது.இதனையடுத்து,ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த செல்வத்தை கட்சி நிர்வாகிகள் மீட்டு,அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்,அவரை பரிசோதித்த  மருத்துவர்கள்,அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.மேலும்,சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதே சமயம்,தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தேர்தல் ரீதியான கொலையா? அல்லது அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இது தொழில் ரீதியான கொலையா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை தொடர்பாக திருச்சி சமயபுரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலை செய்துவிட்டு சென்னையில் இருந்து காரில் தப்பிச்சென்றபோது ராதாகிருஷ்ணன் மற்றும் தனசீலன் ஆகியோரை சமயபுரம் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.