பள்ளிகள் திறப்பு : பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

School Education Minister Anbil Mahesh said all precautionary measures were being taken before the schools reopened and parents should not be afraid.

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் எனவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை சார்பில் நெறிமுறைகள் வெளியிட்டுள்ளோம். மேலும் பள்ளிகளில் எடுக்கவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்து பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், ஒருவேளை முகக்கவசம் கிழிந்து விட்டால் மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் வைத்திருப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் முறையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடைபெறும். மேலும் தற்போதைக்கு பள்ளிகளில் விளையாட்டு நேரம் கிடையாது.

தினமும் காலை 9.30 முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் நடைபெறும். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயப்பட வேண்டாம். அனைவருமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமை என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு : பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!