உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வருமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன பதில்!

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளும் விரும்புகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.

trump Ukraine

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ இல்லத்தில் சந்தித்து ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பிறகு டிரம்ப், “போர் முடிவுக்கு இன்னும் சில வாரங்களில் தெளிவு கிடைக்கும்” என்று உறுதி அளித்தார்.

சந்திப்பில் 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தலைவர்களும் விவாதித்தனர். அதில் 90% ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார். பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து “கிட்டத்தட்ட முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறினார். டிரம்ப், “போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் விரும்புகின்றன. உக்ரைன் சில வலுவான தாக்குதல்களை நடத்தியுள்ளது. நாங்கள் அதை முடிவுக்கு கொண்டுவரப் போகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் மோதல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான யுத்தம் என்று டிரம்ப் குறிப்பிட்டார். “இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளோம்” என்று அவர் உறுதியாக தெரிவித்தார். சந்திப்புக்கு முன்பு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.டான்பாஸ் பகுதி எதிர்காலம், பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட சில “கடினமான” பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், “மிக அருகில் உள்ளோம்” என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஜனவரியில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறினார்.இந்த சந்திப்பு ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் நடைபெற்றது. ஜெலென்ஸ்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை வலியுறுத்தினார். போர் முடிவுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உலக அரங்கில் எழுந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை உக்ரைன் போரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.