மேலும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் – இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

டிரம்ப்-புடின் அலாஸ்கா பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது

US warns India

அமெரிக்கா :அலாஸ்காவில் அதிபர் டிரம்ப் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் முடிவைப் பொறுத்து இந்தியா மீது கூடுதல் இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க கருவூல செயலாளர் எச்சரித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதற்காக 50% வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்தை தோல்வியடைந்தால் இந்திய பொருட்களுக்கான வரி 50%-ல் இருந்து மேலும் உயரும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதாவது, ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ப்ளூம்பெர்க் டிவியிடம் பேசிய கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், நாளை அலாஸ்காவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முடிவுகளைத் தரத் தவறினால் அமெரிக்கா மேலும் இரண்டாம் நிலைத் தடைகளை விதிக்கக்கூடும் என்று கூறினார்.

“ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியர்கள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதித்துள்ளோம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால், தடைகள் அல்லது இரண்டாம் நிலை வரிகள் அதிகரிக்கக்கூடும் என்று எனக்குத் தெரியும்,” என்று கூறினார். மொத்த வரிகள் தற்போது 50 சதவீதமாக உள்ள நிலையில், இந்த முடிவு இந்தியாவிலிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.