வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்திய US! அதிபர் டிரம்ப் அதிரடி!

வெனிசுலா அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

donald trump

வாஷிங்டன் :வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிராண்டா, அரகுவா, லா குய்ரா மாநிலங்களிலும் வெடிப்புகள் கேட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “வெனிசுலா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளோம். இதில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதுரோ அரசுக்கு எதிரான நீண்டகால அழுத்தத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. வெனிசுலா இயற்கை வளங்களை அபகரிக்கவே இந்தத் தாக்குதல் என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் ட்ரம்ப் நிர்வாகம் மதுரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளுக்கு அப்பால் ராணுவ அழுத்தம் கொடுத்து வந்தது. கரீபியன் பகுதியில் 15,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் குவிக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. வெனிசுலா அரசு இதை “இறையாண்மை மீறல்” என்று கண்டித்துள்ளது.

கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன. தென்கொரியா வெனிசுலாவில் உள்ள தனது குடிமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சமூகம் இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று வெனிசுலா கோரியுள்ளது. இந்தத் தாக்குதல் லத்தீன் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறியது என்று பல நாடுகள் விமர்சித்துள்ளன. வெனிசுலா மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. தாக்குதலின் பின்னணி மற்றும் விளைவுகள் குறித்து உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.