வாஷிங்டன் : ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த மூன்று வெவ்வேறு ராணுவத் திட்டங்களை ஆலோசித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மத்திய தளபதி (CENTCOM) தயாரித்துள்ள புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்புக்கு நாளை (ஏப்ரல் 30) விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அல்லது இறுதி அடியை கொடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக Axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் உள்கட்டமைப்பு இலக்குகளை (infrastructure targets) குறிவைத்து ஒரு குறுகிய, ஆனால் தீவிரமான தாக்குதல் நடத்துவது. இந்தத் தாக்குதல் ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரும் என்றும், அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக அதிக நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா நம்புகிறது. இருப்பினும், சர்வதேச சட்ட வல்லுநர்கள், குடிமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவது 1949 ஜெனீவா மாநாட்டின்படி போர் குற்றமாகக் கருதப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்கு திறக்கும் வகையில் அதன் ஒரு பகுதியை அமெரிக்கப் படைகள் கைப்பற்றும் திட்டம். இந்த நடவடிக்கை தரைப்படை பயன்பாட்டையும் உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப், ஈரானிய துறைமுகங்களுக்கு விதித்த தடையை தனது முக்கிய பேரம் பேசும் ஆயுதமாகப் பார்க்கிறார். ஆனால் ஈரான் இன்னும் இணங்காத பட்சத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.மேலும் ,ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் மையமாகக் கருதப்படும் உயர் செறிவு யுரேனியம் கையிருப்பை சிறப்பு படைகள் மூலம் கைப்பற்றும் திட்டம். ட்ரம்ப், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை “உடனடி அச்சுறுத்தல்” என்று கூறி, இதுவே போருக்கு ஒரு முக்கிய காரணம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஈரானுடனான போர் 60 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்குள் இந்தப் போர் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவை ட்ரம்ப் நிர்வாகத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.அமெரிக்க மத்திய தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் மற்றும் கூட்டு தலைமைத் தளபதிகள் குழுத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் ட்ரம்புக்கு இந்தத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
