வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கையை எட்டியுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான், காசா மற்றும் சிரியா விவகாரத்தில் தனது நாட்டின் ராணுவ நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் போர்நிறுத்தம் மற்றும் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ள தற்போதைய சர்வதேசச் சூழலிலும், லெபனான் மற்றும் காசா பகுதிகள் மீதான தங்களது ராணுவத் தாக்குதல்களும், கண்காணிப்பும் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளதாகவும் அறிவித்த சில மணி நேரங்களில் நெதன்யாகு இந்த பேட்டியை அளித்துள்ளார்.
"இஸ்ரேல் நாட்டைச் சுற்றி காசா, லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் நாங்கள் பரந்த மற்றும் ஆழமான பாதுகாப்பு மண்டலங்களை (Security Zones) உருவாக்கியுள்ளோம். நமது நாட்டைப் பாதுகாப்பதற்குக் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் இஸ்ரேலிய படைகள் இந்த பாதுகாப்பு மண்டலங்களில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, லெபனானில் இஸ்ரேல் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 570 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நீடிக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
நெதன்யாகு விளக்கம்
ஈரானிடமிருந்து இஸ்ரேலுக்கு இருந்த அணுஆயுத அச்சுறுத்தல் என்ற உடனடி ஆபத்து, அமெரிக்காவின் உதவியுடன் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ஈரானின் அணுஆயுத விஞ்ஞானிகள், முக்கியத் தலைவர்கள் மற்றும் அணுஆயுதக் கூடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு அவை அழிக்கப்பட்டுள்ளன.
ராணுவக் கட்டமைப்புச் சிதைவு: இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள், ராணுவ உள்கட்டமைப்புகள், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உள்நாட்டு ஒடுக்குமுறைகளுக்குக் காரணமான 'பசிஜ்' (Basij) படைத் தளபதிகளும் ஒழிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார இழப்பு: இந்த ஒட்டுமொத்த தாக்குதல்களின் காரணமாக ஈரானின் பொருளாதாரத்திற்குச் சுமார் நூறு பில்லியன் டாலர்கள் முதல் ஒரு டிரில்லியன் டாலர்கள் வரை மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் நாடு அழிக்கப்படுவதில் இருந்து பல ஆண்டுகளுக்குக் காப்பாற்றப்பட்டுள்ளதாக நெதன்யாகு தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
